ஜொலிக்கும் இந்தியர்களை தக்க வைப்பது எப்படி? : இணையத்தில் அனல் பறக்கும் விவாதம் - சிறப்பு கட்டுரை!
உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதிலும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்ப்பதிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி சுப்பிரமணியன் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்புவும் வலியுறுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளது.
உலகளாவிய கண்டுபிடிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் கிடைக்கிறது.இந்தியாவெங்கும் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை வளர்த்தெடுப்பதன் மூலம், வெளிநாட்டு உற்பத்தி சேவைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீதர் வேம்பு அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில், தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உண்மையான மரியாதையைப் பெறுவதற்கு, இந்தியர்கள் ஆழ்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவின் நிலையைப் பாதுகாப்பதில் உள்நாட்டுவல்லமையின் பங்கு முக்கியம் என்று zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார்.ஸ்ரீதர் வேம்புவின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக, முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி சுப்பிரமணியனும் பதிவிட்டிருக்கிறார்.
அதில், தேவையற்ற கட்டுப்பாடுகள், கடினமான விதிகள் போன்றவை இல்லாத காரணத்தால் அமெரிக்கா அதிக பொருளாதார சுதந்திரமாக செயல்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டால், சர்வதேச அரங்கில் தகுதியான ஒரு இடத்தை இந்தியாவும் அடைய முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இறக்குமதி செய்யப்பட்ட திறமைகளை அமெரிக்கா நம்பியிருப்பதை குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, உள்ளூர் திறன் மேம்பாட்டின் மூலம் நிலையான வளர்ச்சிக்கு இந்தியா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். மேலும், "சமூகத்தின் பெரும் பகுதியினர் பின்தங்கியிருந்தால் தேசிய வளர்ச்சியை அடைய முடியாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
local innovation and talent development ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் ஸ்ரீதர் வேம்பு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான தனது Zoho நிறுவனத்தை ஒரு முன்மாதிரியாக நிறுவனமாக்கி வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்க, சுதந்திரமான பொருளாதார கொள்கை அவசியம் என்பதை நீண்ட காலமாகவே முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன் வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில், குறுகிய கால சாதனைகளை விட நீண்ட கால நிலையான வளர்ச்சிக்குக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இருவரும் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் எக்ஸ் தளப் பதிவுகள், இந்தியாவின் தனித்துவமான வலிமையைப் பயன்படுத்துவதற்கும், வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒரு அழைப்பாக அமைந்துள்ளன.