டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!
தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது என்றும், கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி இந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது முதல், ஏலத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை, தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, அந்த சுரங்க ஏலத்தை கைவிடுமாறு எந்த கோரிக்கையும் தமிழக அரசு விடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
டங்ஸ்டன் சுரங்க பகுதி அமையவுள்ள இடத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் சுரங்கத்தை ஏலத்துக்கு விடுவதற்கு எதிராக மக்களிடையே பல கோரிக்கைகள் வந்தன என தெரிவித்துள்ள மத்திய அரசு, புவியியல் ஆய்வு மையம் டங்ஸ்டன் சுரங்கத்தை மறுபரிசீலனை செய்து, சுரங்க எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளது
மேலும், டங்ஸ்டன் சுரங்க ஏலதாரருக்கு ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.