டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!
மதுரை நாயக்கர்பட்டியில் செயல்படுத்தப்பட இருந்த டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisement
டெல்லியில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை தமிழக விவசாய குழுவினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் சென்று நேற்று சந்தித்தனர்.
அப்போது, டங்ஸ்டன் திட்ட பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் தளங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரிய இடங்கள் அடங்கும் என, விவசாய குழுவினர் தெரிவித்தனர். எனவே, திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் காரணமாக டங்ஸ்டன் திட்டத்திற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதில் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.