டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
Advertisement
தமிழக சட்டப் பேரவை கூடியதும் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்கத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது பேசிய பாஜக சட்டப் பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அன்றைக்கே எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் என்றும், பல மாதங்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டார்.
தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மாநில அரசின் ஒப்புதலின்றி சுரங்கம் தொடர்பான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று தீர்மானத்தை வரவேற்று பேசினார்.
இதேபோல டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராடுவதால் மத்திய அரசு கட்டாயமாக கைவிட வேண்டும் என பாமக சட்டப் பேரவைக் குழு தலைவர் தலைவர் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டார்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, சுரங்கம் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்தில் தமிழக அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும், தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் தடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்வதாகவும், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம் என கூறிய அவர், ஒருவேளை திட்டம் அமையும் சூழல் வந்தால், முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என சூளுரைத்தார்.
காரசார விவாதத்துக்குப் பின்னர், சட்டப் பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.