டங்ஸ்டன் திட்டம் ரத்து : கடந்து வந்த பாதை!
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
Advertisement
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது
2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு ஏல அறிவிப்பு வெளியானது. 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிங்க் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஏல அனுமதி வழங்கப்பட்டது.
இயற்கை வளங்களும், பல்லுயிர்களும் நிறைந்த அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மதுரை மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
ஏல அறிவிப்பு வெளியானது முதல் ஏலம் முடிவுக்கு வரும் வரை எந்தவித எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை என மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் பதிலளித்தது.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக 2023ம் ஆண்டு மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு மீது அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
2024ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடுமாறு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்து வலியுறுத்தினர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி 50க்கும் அதிகமான கிராம மக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களை நேரில் சந்தித்து திட்டம் நிச்சயம் கைவிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் அண்ணாமலையின் மூலம் டெல்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சருடன் சந்தித்து பேசினர்.
முடிவில் மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அனுமதியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.