டெல்லியில் தேசிய ஒற்றுமை ஓட்டம்! : அமித் ஷா தொடங்கி வைத்தார்
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி டெல்லியில் ஒற்றுமை ஓட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, மனோகர்லால் கட்டார், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பல ஆண்டுகளாக சர்தார் வல்லபபாய் படேலுக்கு பாரத ரத்னா விருது மறுக்கப்பட்டதாகவும், பிரதமர் மோடிதான் அவரது நினைவாக குஜராத்தில் உலகிலேயே உயரமான சிலையை நிறுவி படேலை உயிர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.
இதேபோல குஜராத் மாநிலம் காந்தி நகரில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஒற்றுமை ஓட்டத்தைத் தொடங்கி வைத்த அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தானும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.
இதேபோல ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஒடிஸா, திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.