டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் - பொதுமக்கள் அவதி!
தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
டெல்லி, ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மூடுபனி காரணமாக எதிர்வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
மேலும், கடும் குளிர்வாட்டி வருவதால், அதிகாலை நேரத்தில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து, தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பொது இடங்களில் தங்கி இருப்பவர்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடும் குளிர் காரணமாக தால் ஏரி உறைந்தது. ஜம்மு-காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்பொழிவு காரணமாக நீர்நிலைகள் உறைந்து வருவதால் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தால் ஏரியின் மேற்பரப்பு கடும் குளிர் காரணமாக உறைந்து காணப்படுகிறது. இதனால் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.