தங்கம் வாங்க...இந்தியாவுக்கு வாங்க - சிறப்பு தொகுப்பு!
சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் விலை குறைவாக உள்ளது. அதற்கான காரணங்களை பார்க்கலாம்.
2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. எனினும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சிறிய சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை, டாலர் மதிப்பு போன்றவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. டாலர் மதிப்பு உயரும் போது தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருவதால் அந்நாட்டு ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காது என்று கூறப்படுகிறது.
அதன்காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளதால் இந்தியாவில் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. அதே நேரம் பண்டிகை காலம் என்பதாலும் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் மாதம் என்பதாலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நவம்பர் 16-ஆம் தேதி 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 75 ஆயிரத்து 650 ரூபாயாக இருந்தது. ஆனால், வளைகுடா நாடுகளான ஓமனில் 75 ஆயிரத்து 763 ரூபாயாகவும், கத்தாரில் 76 ஆயிரத்து 293 ரூபாயாகவும் காணப்பட்டது.
இஸ்ரேல் - காஸா போர் காரணமாக அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதிகளவில் அதை வாங்கியதே விலை உயர்வுக்கு காரணம். மேலும் இறக்குமதி வரி, உள்ளூர் சந்தை நிலவரங்கள் போன்றவையும் காரணமாக அமைந்தன.
இந்தியாவை பொறுத்தளவில் வரும் பிப்ரவரி மாதம் வரை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்றும், அதன்பிறகு மீண்டும் உச்சத்தை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.