தச்சங்குறிச்சியில் தொடங்கியது ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள், அடக்க முற்படும் வீரர்கள்!
நடப்பு ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 -ஆம் தேதி வரை 120 -க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள், 30 -க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுப் போட்டிகள், 50 -க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. போட்டியில், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
750 மாடுகளும் 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் வீதம் மாடுபிடி வீரர்கள் களமிறங்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு விழா மேடையில், அமைச்சர்களுக்கு போடப்பட்ட நாற்காலியில் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த நபர்களை உடனே கீழே இறங்குமாறு விழாக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் முன்னிலையில், இருதரப்பினர் தாக்கிக் கொண்டதால், போட்டியை காண வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.