தடுப்பணையால் தத்தளிக்கும் கிராமம்! : மக்களின் வேதனையை தீர்க்குமா அரசு?
தென்பெண்ணை ஆற்றில் அவ்வபோது ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஒரு கிராமமே கடும் இன்னலுக்குள்ளாகிறது. சேமடைந்த தளவானூர் தடுப்பணையை கட்ட வேண்டியதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..!
Advertisement
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றின் கரையோரத்தில் உள்ள தளவானூரில், வெள்ள நீர் புகுந்து கிராமமே ஆறாக மாறிய காட்சிகள் தான் இவை..!
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபரில் 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரத்துடன், மொத்தம் 3 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட தடுப்பணையை அன்றைய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார். கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலே தடுப்பணையின் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதை முன்னிறுத்தியே பரப்புரையில் ஈடுபட்டார் திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின்.
மேலும் தடுப்பணை அருகே பொன்முடி தலைமையில் திமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அன்றைய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், புதிதாக தடுப்புச் சுவர் கட்டுவதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் உடனடியாக கட்டப்படும் என்றும் கூறியிருந்தார்.
பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததால், கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதையடுத்து அணையை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி அணை கட்டுவதற்கான ஆவணங்களை தமிழக அரசிடம் அளித்துள்ளதாகவும் இரண்டு கரைப்பகுதியிலும் சரி செய்வதற்காக, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை அந்த பகுதியில் அரசு எந்த பணியையும் தொடங்காததால், தற்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கிராமம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், கிராமத்தில் உள்ள வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் முருகவேலிடம் தடுப்புச் சுவர் கட்ட ஒதுக்கியதாக கூறப்படும் 15 கோடி வெறும் வெற்று விளம்பரம் தானா என கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கிராம மக்களை திமுகவினர் ஒருமையில் மிரட்டியதால், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தடுப்பணை கட்டப்படும் என உறுதி அளித்திருந்த, வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்காமல் நழுவி சென்றார். அது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆட்சி மாறினாலும் தங்களின் அவலநிலை மாறவில்லை என வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், வெள்ளத்தின் போது வீட்டு உபயோக பொருட்களை அனைத்தையும் இழந்ததாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆற்றில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதி கிராமமே ஆறாக மாறிவிட்டது என வேதனை தெரிவிக்கும் கிராமத்தினர், தடுப்பணையை அகற்றியாவது, தங்கள் கிராமத்தை காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் தளவானூர் தோப்பு கிராம மக்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்பதே தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நோக்கம்.