தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்துக்குள் எடுத்து செல்லப்பட்டது குறித்து விசாரணை : சிறைத்துறை
தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இருவர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரியும் அவர்களின் உறவினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்
இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன் இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிகளின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பிலால் மாலிக் உடலில் கடுமையான காயங்கள் இருப்பதாகவும், பன்னா இஸ்மாயில் மற்றும் மற்றொரு கைதியின் உடலில் லேசான காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சிறை வளாகத்துக்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.