தனியார் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
சென்னையில் தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் சாரதா என்பவர், சக ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் இழிவாக பேசுவது, ஒருமையில் அழைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல, அவர் பள்ளி மாணவர்களிடமும் தேவையின்றி கடுமையான முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமை ஆசிரியை சாரதாவை கண்டித்தும், அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் தலைமை ஆசிரியையை உடனடியாக நீக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே மாணவர்கள் சிலர் வகுப்பறைகளில் இருந்த மேஜை, நாற்காலி, டியூப்லைட் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீசார் தனியார் பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.