தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது.
வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து ஆசிரியர்களோடு இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அதனைத்தொடர்ந்து பாடல்களுக்கு நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும், பொங்கல் விழாவை கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது பாரம்பரிய உடைகளை அணிந்து மாணவிகள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து ஆடல் பாடல் மற்றும் உற்சாகமாக விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளின் சார்பில் தங்கள் துறை சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.பின்னர் பறை இசை இசைக்கப்பட்டு வெளிநாட்டு மாணவிகள் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டனர்.