தமிழகத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!
தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்டம் பாலம் உட்பட மாநில நெடுஞ்சாலையை விரிவுப்படுத்த 36 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில், மேட்டுக்கடை - மூத்தம்பாளையம் சாலையை விரிவுபடுத்த 6 கோடியே 85 லட்சம் ரூபாயும், மதுரை மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 154-ஐ விரிவுப்படுத்த 18 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தஞ்சை - திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஒன்பதரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படும் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் தடுப்பு சுவர் கட்ட 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.