தமிழகத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, பேரிடர்களை கையாள்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் முன்கூட்டியே பின்பற்றும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம்கள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.