தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
இதன் தொடர்ச்சியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவிழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்க தொடங்கும் என்பதால் இன்று முதல் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் பரவலான மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடலூரில் அதிகபட்சமாக லால்பேட்டை பகுதியில் 75 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதேபோல், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.