தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - உறுப்பினர்களிடையே காரசார விவாதம்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாளில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அடுத்த மாதத்திற்குள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என உறுதியளித்தார்.
மேலும் தமிழகத்தில் நாய்த்தொல்லை அதிகரித்து வருவதாக சாக்கோட்டை எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவிக்க , சென்னையில் 3 நாய்கள் இன கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதை அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டினார். மேலும், இதுகுறித்து உள்ளாட்சித்துறை ஆணையர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தகவலளித்தார்.
இதனைத்தொடர்ந்து, மணப்பாறை - ராமேஸ்வரம் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வேண்டும் என எம்.எல்.ஏ அப்துல் சமது கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், திருச்சி, புதுக்கோட்டை மண்டலம் மூலம் போதிய பேருந்துகள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளதால் மணப்பாறை - ராமேஸ்வரம் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வழங்கப்படாது என பதிலளித்தார்.
சேலம் மேற்கு எம்.எல்.ஏ இரா.அருள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் ஆயிரத்து 958 நூலகங்களுக்கு wifi வசதியும், 108 நூலகங்களில் virtual realityயும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சேலத்தில் 35 நூலகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் பதிலளித்தார்.