தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 28 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் , பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த 28 மீனவ சகோதரர்கள், பாரதப் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் சீரிய முயற்சியால், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு, தாயகம் வந்தடைந்தனர்.
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர்களை, நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர்.காந்தி, தமிழக பாஜக மாநிலச் செயலாளர் சதீஷ் மற்றும் மீனவர் அணி மாநிலத் தலைவர் M.C.முனுசாமி ஆகியோரும் வரவேற்றனர்.
உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் மீனவ சகோதரர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அண்ணாமலை கூறியுள்ளார்.