தவெகவில் தஞ்சம் அடைகிறாரா ஆதவ் அர்ஜூனா? - சிறப்பு தொகுப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக்கழகத்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் வருகை குறித்தும், அவருக்கும் விஜய்க்கும் இடையேயான நெருக்கம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
லாட்டரி மார்ட்டினின் மருமகனாக அறிமுகமாகி, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பிரபலமடைந்தவர் தான் இந்த ஆதவ் அர்ஜுனா.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் முழக்கம், ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் வருகைக்கு பிறகே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் மாநாடு தான் ஆதவ் அர்ஜுனா அரசியல் வருகையின் பிள்ளையார் சுழி. திருமாவளவன் இதுவரையில் நடத்திராத அளவிற்கு திட்டமிட்ட ஒருங்கிணைப்பு, தொண்டர்கள் மற்று நிர்வாகிகள் வருகை, ஏற்பாடு அனைத்துமே முறையாக அமைந்ததற்கு பின்னணியில் இருந்தது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு தான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பணமும் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், மாநாடு முடிந்த கையோடு அதே மேடையிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைந்து விட்டதாக அடையாளப்படுத்தினார் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளாக ஆதவ் அர்ஜுனாவின் வருகை, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மத்தியில் அதிருப்தியாக உருவெடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் கையொப்பமிட்ட கையெழுத்து வெளியானது.
திமுக கூட்டணி விவகாரத்தை தாண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பத்தை பிரதிபலித்த ஆதவ் ஆர்ஜுனாவுக்கு கட்சிக்குள்ளாகவே ஆதரவு பெருகியது.
இதற்கிடையில் தான் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கும், ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே புதிய நட்பு உருவானது. தான் தொகுத்த எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் புத்தகத்தை தொல் திருமாவளவன் மற்றும் விஜய் ஆகியோரை வைத்து வெளியிட வேண்டும் என முடிவு செய்த ஆதவ் அர்ஜுனா அதற்கான ஒப்புதலையும் பெற்றுவிட்டார்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் திமுகவை கடுமையாக விஜய் சாடிய நிலையில், அந்த புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என திருமாவளவன் அறிவித்தார். அதற்கு பின் திமுகவின் அழுத்தம் இருந்ததாகவும் புகார் எழுந்தது.
திட்டமிட்டபடி நிகழ்வும் நடந்தது. எதிர்பார்த்தது போலே திமுகவை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார். ஆனால் யாரும் எதிர்பாராததும் ஒன்று நடைபெற்றது. அது தான் ஆதவ் அர்ஜுனாவின் ஆக்ரோஷமான உரை. தமிழகத்தில் தற்போது இருக்கும் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என முழங்கினார்.
அதிலும் குறிப்பாக பிறப்பில் முதலமைச்சர் உருவாகக்கூடாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிடுவது போல அமைந்திருந்தது.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுக தலைவர்கள் எதிர்வினை ஆற்றுவதற்கு முன்பாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். ஆதவ் ஆர்ஜுனாவின் பேச்சு திமுக கூட்டணியை உடைத்து விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதையும் அவர்களின் கண்டனப் பேச்சு வெளிப்படுத்தியது.
இறுதியில் தொடர் அழுத்தத்தின் காரணமாக ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் இடைநீக்கம் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நிம்மதியை தந்தாலும் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
இடைநீக்கத்திற்கு பின்பு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை முன்பை விட உயர்த்தி முழங்கத் தொடங்கியிருக்கும் ஆதவ் அர்ஜுனா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில் ஆதவ் அர்ஜூனாவுக்கும் தவெக தலைவருக்குமான நட்பு வட்டாரம் விரியத் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தவெகவின் முதல் மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் முழங்கிய நிலையில், அதே முழக்கத்தை முன்னிருத்தி இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் பேசப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திலும் விஜய்க்கு அடுத்த நிலையில் புஸ்ஸி ஆனந்தை தவிர முக்கிய தலைவர்கள் பட்டியலில் யாரும் இல்லாத நிலையில், ஆதவ் அர்ஜுனா அந்த இடத்தை பிடிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா அரசியலுக்கு புதியவர் என்றாலும், 2016 ஆம் ஆண்டு திமுகவிற்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோரை அழைத்து வரும் அளவிற்கு செல்வாக்கு இருப்பதால் அவரை தவெகவில் இணைக்க வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அரசியல் கட்சியை தொடங்கிய பின் முதல் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தவெகவிற்கு அரசியலாக மட்டுமில்லாமல், தேர்தல் வியூகப் பணிகளையும் ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் என்பதால் விஜய்யும் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.