தாய்மொழிகளில் மருத்துவக் கல்வி கொண்டு வர மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் 12 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75 ஆயிரம் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை கொண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனைக்காக டெல்லிக்கே செல்ல வேண்டியிருந்ததால் மக்கள் சிரமப்பட்டதாகவும், தற்போது நாடு முழுவதும் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தாய்மொழிகளில் மருத்துவக் கல்வி என்ற மிகப்பெரிய முடிவை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பைக் கொண்டு வரவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.