திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதி அளித்த விவகாரம் - சென்னை மாநகர ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதியளித்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததாகவும்,
ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்த அனுமதித்ததாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் காவல்துறை செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சென்னை நகர காவல் சட்டவிதியை மீறி செயல்பட்ட காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் உள்துறை செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.