திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் - சசிகலா பேட்டி!
திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சசிகலா கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து கருணை இல்லத்தில் முதியவர்களுடன் இணைந்து கேக் வெட்டியதுடன் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, 2013 ஆம் ஆண்டு பெண்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை பெயர் மாற்றி தோழி திட்டம் என திமுக அரசு அறிவித்துள்ளதாக விமர்சித்தார்.
மக்கள் பிரச்னைகள் பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை எனவும் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பது பற்றியே யோசிக்கிறார்கள் எனவும் சசிகலா குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன் எனக் கூறிய சசிகலா, திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் எனவும் குறிப்பிட்டார்.