திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துகிறது! - எல். முருகன் குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்ததில், திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதிலே முழு கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நமக்கெல்லாம் அவமானத்தை கொடுக்க கூடிய ஒரு செயல். திமுக அரசு ஒரு செயலை ஒரு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள்.
குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு உள்ளது ஆனால் அவர்கள் கடமையில் இருந்து தவறியுள்ளார்கள்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இந்த வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி வேறுயாரும் இல்லை என்று காவல்துறை தரப்பில் ஒரு விளக்கத்தை கொடுக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பிலிருந்து மேலும் ஒருவர் இருக்கிறார் என்று தகவல் வந்தது. இது சமூக வலைதளங்களில் கூட யார் அந்த சார் என ட்ரெண்ட் ஆகியது.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. யாரோ ஒரு நபரை மூடி மறைகின்றன செயலை எதற்காக திமுக அரசு செய்ய வேண்டும்?
பெண்ணுக்கு நியாயம் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை தவிர்த்து பாதிக்கபட்ட பெண் குழந்தையின் விவரத்தை வெளியில் விடுவது சட்டப்படி குற்றமான செயல்.
காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் FIR வெளியானது. இது இந்த வழக்கை நடத்த வேண்டும் என்கிற துணிவு இல்லாமையை காவல்துறை காட்டுகிறது. பாதிக்கப்பட்டவரை பாதுக்காக்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பாதிக்கபட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது தான் பாஜக பணியாக இருந்தது வருகிறது.
இந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட ஆண்டாக கடை பிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இது தொடர்பாக பாஜக சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு தாய்மார்கள், பெண் குழந்தைகளின் வேதனைகளை நாம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.