திமுக கவுன்சிலரின் அவதூறு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!
அண்ணா பல்கலைக் கழக மாணவியை திமுக கவுன்சிலர் எஸ்.வி.ரவிச்சந்திரன் அவதூறாக பேசியதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
சென்னை மாநகராட்சி 184ஆவது வார்டு உறுப்பினரும் 14ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பதிவிட்டுள்ளார்.
குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், 2006-2011 திமுக ஆட்சியில் பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக குண்டாஸ் வழக்கில் கைதானவர் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில் இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை எனவும் விமர்சித்துள்ளார். பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன் என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, கோவையில் தனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன், பஞ்சுச் சாட்டைதானே, அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம் தயாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.