திமுக தொடங்கப்பட்ட ஆண்டு தெரியுமா? : இளைஞர் அணி கொடுத்த 'ஷாக்' டிரீட்மெண்ட் - சிறப்பு தொகுப்பு!
நாமக்கலில் நடந்த திமுக சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டத்தில், திமுக துவங்கப்பட்ட ஆண்டு கூட தெரியாமல் இளைஞர் அணியினர் திருதிருவென விழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...
Advertisement
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணியினருக்கு சமூக வலைதள பயிற்சி பாசறை நடத்தப்பட்டது. குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் ஈரோடு திமுக எம்.பி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் திமுக-வினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து தமிழன் பிரசன்னா எடுத்துரைத்தார். அப்போது அவரை கவனித்துக்கொண்டிருந்த இளைஞர் அணியினரிடம், திமுக எப்போது தொடங்கப்பட்டது என்று கூற முடியுமா? என தமிழன் பிரசன்னா கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழில்நுட்ப பிரிவு இளைஞர் அணியினர், கேள்விக்கு பதில் தெரியாததால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திருதிருவென விழித்தனர்.
ஒருவேளை கேள்வி புரியவில்லையோ என எண்ணிய தமிழன் பிரசன்னா, திமுக தொடங்கப்பட்ட ஆண்டு எதுப்பா சொல்லுங்க எனக்கூறி அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போது கூட்டத்தில் ஒருவர் திமுக தொடங்கப்பட்ட ஆண்டு 1947 எனவும், மற்றொருவர் 1949 எனவும் பதிலளித்து தலைமை தாங்கிய திமுக மூத்த நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த தமிழன் பிரசன்னா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்டதாக கூறி அங்கு ஏற்பட்ட சலசலப்புக்கு முடிவுகட்டினார். நிலைமை மோசமானதை உணர்ந்த திமுக மூத்த நிர்வாகிகள், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்களை நைசாக பேசி வெளியே அனுப்பினர்.
நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஒரு நிகழ்வில் திமுக-வினர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு தெரியாமல் விழித்த சம்பவம் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.