திருச்சியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மருங்காபுரியை சேர்ந்த கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். கே.கே.நகர் அருகே ஓலையூர் ரிங் ரோடு பகுதியில், உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி இருவரும் பணியாற்றி வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஓலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.