திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் துணிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நீராடும் பக்தர்கள், தங்கள் துணிகளை அப்படியே விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி பரிகாரங்களை செய்துவிட்டு, கோயிலில் சுவாமி தரிசனம் செய்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அப்படி புனித நீராடும் பக்தர்கள் தாங்கள் உடுத்திய பழைய துணிகளை கடலில் அப்படியே விட்டுச் செல்வதால், அந்த துணிகள் கடற்கரையில் ஒதுங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், குவியல் குவியலாக கடற்கரையில் ஒதுங்கி கிடக்கும் துணிகளை அப்புறப்படுத்தவும், பக்தர்கள் துணிகளை விட்டுச் செல்வதை தடுக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.