திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது உறவினர்கள் 50 பேருடன் சிறப்பு தரிசனம் செய்ததால், பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரோஜா தனது உறவினர்களுடன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதையொட்டி, சிறப்பு வழியில் சென்ற அவர், சுமார் ஒருமணி நேரம் பிராகாரத்தைச் சுற்றி வந்தார்.
இதனால், பக்தர்கள் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. இதில் அசெளகரியம் அடைந்த பக்தர்கள், நடிகை ரோஜாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வைகுண்ட ஏகாதசியில் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு தேவஸ்தான அதிகாரிகள்தான் காரணம் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.