மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஏற்றப்பட்ட மகா தீபம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதற்காக மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட தாமிரக் கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டு, 300 கிலோ நெய்யில் 150 மீட்டர் காடா துணி ஊறவைத்து தாமிர கொப்பரையில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை ஆறு மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றியவுடன் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் காத்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.
தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப்பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, கார்த்திகை உற்சவ விழா கடந்த 10 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.
இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்பட்டது. கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என அனைவரும் பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதி என கோயில் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்ச தீபங்கள் ஏற்றினர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கீழமாசி வீதி , தேரடி அருகே எழுந்தருளினர். பின்னர், அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.