திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி : 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16-ம் கால் மண்டபம் அருகே இந்து முன்னணி அமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் தலைமையேற்றார்.
அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னதாக முளைப்பாரி மற்றும் பால் குடங்களை ஏந்தி அங்குள்ள வீதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
கூட்டத்திற்கு பின் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் திடீரென திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.