திருமணிமுத்தாறு ஆற்றில் திறந்து விடப்படும் சாயக்கழிவு!
சேலம் திருமணிமுத்தாறு ஆற்றில் சாயக் கழிவுகளை திறந்து விடுவதால் கிணற்று நீர் மாசடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேர்வராயன் மலையில் உருவாகி சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் திருமணிமுத்தாறு மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், சேலத்தில் ஆற்றின் ராஜவாய்க்காலில் இரவு நேரங்களில் சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக கொண்ட நத்தம் ஏரி உட்பட 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் சாயக் கழிவாக மாறியுள்ளன. கிணற்று நீரும் மாசடைந்த பயன்படுத்த முடியாத நிலையில், சுமார் 350 ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புகாரளித்தும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், முதலமைச்சர் தலையிட்டு ஆற்றில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.