திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பணம் கொடுத்தால் விரைவு தரிசனம் - இடைத்தரகர்கள் அட்டூழியம்!
திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கும் நிலையில், இடைத்தரகர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை நேரடியாக கோயிலுக்குள் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஞாயிறு விடுமுறையொட்டி திருவண்ணாமலை கோயிலுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்த நிலையில், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் ஈடுபடத்தப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், கோயில் நுழைவாயிலில் மட்டுமே போலீசார் தென்பட்டனர். அப்போது பொதுமக்கள் சிலர் இடைத்தரகர்களுக்கு பணம் வழங்கி நேரடியாக கோயிலுக்குள் சென்றதால் அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள், இடைத்தரகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்களிடம் அலட்சியமாக பதிலளித்த இடைத்தரகர், முடிந்தால் கோயில் நிர்வாகத்திடம் புகாரளியுங்கள் என தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் ஆவேசமடைந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் இடைத்தரகர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்திற்கு பணம் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல் சில பக்தர்களை மாற்று வழியில் அழைத்து வரும் இடைத்தரகர்கள் கோயில் அமர வைத்து தரிசனம் செய்து பின்பக்கம் வழியாக அழைத்து செல்வதாகவும், இதனால் வரிசையில் கால் வலிக்க காத்திருக்கும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.