திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு - மூவரை தேடும் பணி தீவிரம்!
திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.
அப்போது அங்குள்ள மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 80 டன் எடைகொண்ட பாறை உருண்டு அடிவார பகுதியான வ.உ.சி நகர் 11-வது தெருவில் இருந்த இரு வீடுகள் மீது விழுந்தது. இதில் ஒரு வீட்டில் இருந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து 3-வது நாளாக அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே 3-வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டவில்லை எனவும், மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீட்புப்படையினர் உயிரிழந்தவர்களின் முகத்தைக்கூட காட்ட மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.