திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின.
இதனையடுத்து படம் வெளியாகி 3 நாட்களுக்கு, திரைப்படங்கள் குறித்து விமர்சனங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், பெரிய பட்ஜெட் படங்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாவதால் திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த நிலையில், விமர்சனம் செய்வது கருத்து சுதந்திரம் என்பதால் பொதுவான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார்.
அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள் மற்றும் யூ- டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.