தி.மு.க நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் : விஜய் !
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, ஆளுங்கட்சியான பிறகு எதிர்ப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களை கடந்து போராட்டம் நடைபெறும் நிலையில், போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்தார்.
பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்களை சந்திக்க பிரச்சார வாகனத்தில் தவெக கொடியை கையில் ஏந்தியபடி வருகை தந்த விஜய்க்கு அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், போராட்டத்தில் ஈடுபடும் பரந்தூர் மக்களுக்கு எப்போது துணை நிற்பேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தாம் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என்றும், விவசாய நிலம் இல்லாத இடத்தில் விமானநிலையத்தை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
விமானநிலையத்திற்காக ஏரிகளை அழித்தால் சென்னை வெள்ளக்காடாகும் எனக்கூறிய விஜய், விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுக, தற்போது ஆளுங்கட்சியான பிறகு விவசாயிகளை எதிர்ப்பதாக விஜய் குற்றம்சாட்டினார்.
சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்த திமுக, பரந்தூர் விமான நிலையத்தை ஏன் எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பிய அவர், விமானநிலையத்தை தாண்டி அரசுக்கு இதில் ஏதோ ஒரு லாபம் உள்ளது என தெரிவித்தார்.
தவெக நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்குவதற்கு கூட காவல்துறை அனுமதி வழங்குவதில்லை எனக்கூறிய விஜய், நாடகமாடுவதில் திமுகவினர் கில்லாடிகள் என விமர்சித்தார். ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தவெக தலைவர் விஜய்க்கு, பரந்தூர் விவசாயிகள் பச்சை துண்டு அணிவித்து, நெல்மணிகளை பரிசாக வழங்கினர்.