தீபாவளி பண்டிகை: செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டையில் செட்டி நாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைக்கு அடுத்தாற்போல் பலகாரங்களே முக்கிய இடம் பிடிக்கும். அதிலும் நமது தென் மாவட்டங்களில் செட்டிநாடு பலகாரங்களுக்கு என தனி இடம் உண்டு.
இன்னும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், செட்டி நாடு பலகாரங்களைத் தயாரிக்கும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டை பகுதியில் பலகாரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு அதிரசம், மசாலா முறுக்கு, கைமுறுக்கு, மகிழம்பூ முறுக்கு, பாசிப்பருப்பு மாவு உருண்டை, சீப்பு சீடை, உப்பு சீடை, இனிப்பு சீடை, கார சீடை, தட்டை, லட்டு, பூந்தி என பலவகையான பலகாரங்கள் செய்யப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள் வீட்டில் செய்யப்படும் பலகாரங்களே போலவே ஒரு முறை பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் தூய நெய்யைக் கொண்டு, சுவை மற்றும் சுகாதாரத்துடன் செய்யப்படுகிறது. இதனால் இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு என தனி மதிப்பும், வரவேற்பும் பொதுமக்களிடையே உண்டு.
இப்பலகாரங்கள் உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.