தீபாவளி விருந்தில் மது, மாமிசம் : இந்துக்களின் கோபத்துக்கு ஆளாகிய பிரிட்டிஷ் பிரதமர் - சிறப்பு கட்டுரை!
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தீபாவளி விருந்தில், அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்கள் பரிமாறப்பட்டதற்கு அந்நாட்டு இந்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 14 ஆண்டுகளாக இங்கிலாந்தில் பிரதமர் வசிக்கும் 10, டவுனிங் தெருவில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தனது அதிகாரப் பூர்வ இல்லமான, 10 டவுனிங் தெருவின், வீட்டு வாசலில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல் முறையாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தீமையை அழித்து நன்மை ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகையின் சிறப்பை விளக்கும் வகையில் இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. பிரபல குச்சிப்புடி நடனக் கலைஞர் அருணிமா குமார் மற்றும் அவரது மாணவர்கள் 'ஜோதிர்' என்ற பாரம்பரிய இந்திய நாட்டிய நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள்.
உலகம் முழுவதும் நிறைய இருள் இருப்பதாகத் தோன்றுவதாகவும், இருளுக்கு மேல் ஒளியைக் கொண்டாடுவது மிகவும் முக்கியமானது என்றும், அதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது நம்பிக்கையைத் தருகிறது என்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியிருந்தார்.
மேலும், பிரிட்டன் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஒளியின் மீது கண்களை நிலை நிறுத்த வேண்டிய நேரமே தீபாவளி என்றும் கூறியிருந்தார்.
தீபாவளி பண்டிகையுடன் சீக்கியர்களின் புனித தின விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டதாக இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வழங்கிய விருந்தில் மது வகைகள் மற்றும் அசைவ உணவுகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வழங்கிய தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட சில சிறப்பு விருந்தினர்கள், பீர், ஒயின் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறியதைக் கண்டு அதிருப்தி அடைந்ததாக தி ஸ்பெக்டேட்டர் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்து சமூகத்தினருக்கான இன்சைட் யுகே எனும் அமைப்பு,தீபாவளி பண்டிகைக்கான நேரம் மட்டுமல்ல, கொண்டாடும் முறையும், ஆழ்ந்த மத அர்த்தத்தையும் கொண்டுள்ளது என்றும், தூய்மை மற்றும் பக்தியை வலியுறுத்தும் தீபாவளி பண்டிகை விருந்தில்,அசைவ உணவுகள் மற்றும் மது வகைகள் கண்டிப்பாக தவிர்க்க பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மது மற்றும் அசைவ உணவுகளுடன் கொண்டாடப்பட்டதன் மூலம் எந்த சமய புரிதலும் இல்லாமல் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தீபாவளி கொண்டாட்டம் நடந்துள்ளது என்றும் எக்ஸ் தளத்தில் இன்சைட் யுகே அமைப்பு பதிவிட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் ஆலோசகர்கள் மிகவும் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும், இருந்திருப்பார்கள் என்றும், மது போதை மற்றும் இறைச்சியின் மயக்கத்தில் இந்த ஆண்டு தீபாவளி இருந்ததாக பிரிட்டனின் பிரபல பண்டிட் சதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் மது மற்றும் மாமிசம் வழங்கப் பட்டதற்கு, இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள் பிரதமரைக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு, முதல் பிரிட்டிஷ்-ஆசியப் பிரதமரான ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியும் மற்றும் இரண்டு மகள்களுடன், விளக்குகள் ஏற்றி தீபாவளி கொண்டாடினார். முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழங்கிய தீபாவளி விருந்தில், மது மற்றும் மாமிசம் பரிமாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.