தீவிரமடையும் மண்பாண்ட தயாரிப்பு! : மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாராகும் பொங்கல் பானைகள்!
நெல்லையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!
தமிழர் திருநாளான தை பொங்கலன்று புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, செங்கரும்பு கட்டி, புதுப்பானையில் பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல்... என்ற முழக்கத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் நம் தமிழ் மக்கள்..!
இத்தகைய பாரம்பரிய, பண்பாட்டு பெருமைவாய்ந்த பொங்கல் திருநாளுக்காக, பானை, அடுப்பு உள்ளிட்ட மண் பாண்டங்களை தயாரிக்கும் பணிகள் நெல்லை மேலப்பாளையம், காருக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மும்முறமாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு மழை, வெள்ள பாதிப்புகளால் நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் முற்றிலுமாக முடங்கியது. இது மண்பாண்ட தொழிலாளர்களை சோர்வடைய செய்த நிலையில், இம்முறை பண்டிகைக்கு பல மாதங்கள் முன்பிருந்தே, மண்பாண்ட தயாரிப்பில் தொழிலாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வித விதமான வகையில், பற்பல வண்ணங்களில் பானைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு மண் பாண்டங்களில் உணவு சமைக்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், இந்த ஆண்டு மண்பாண்ட விற்பனை அமோகமாக நடந்து வருவதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தயாரிக்கப்பட்ட மண் பாண்டங்களை, விற்பனைக்காக வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.