காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது! : பாலச்சந்திரன்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவுவதாகவும், இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்த பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் இன்று வரை, இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாகவும் கூறினார்.