For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மார்கழி மாதத்தின் மகத்துவம் - சிறப்பு கட்டுரை!

07:00 PM Dec 22, 2024 IST | Murugesan M
தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மார்கழி மாதத்தின் மகத்துவம்   சிறப்பு கட்டுரை

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி மட்டுமே. அதனால், மாதங்களில் தான் மார்கழியாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் உயர்வாக சொல்லும் மார்கழி மாதத்தின் சிறப்புக்களை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள். அதாவது, எந்த மங்கல நிகழ்ச்சி ஆனாலும், பிள்ளையாரையைத் துதித்து தொடங்கி, ஆஞ்சநேயரைத் துதித்து முடிப்பார்கள். சொல்லப் போனால் ஆரம்பித்த காரியம் நல்ல படியாக முடிந்தது என்பதையே பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

Advertisement

இதன்படி பார்த்தால், மார்கழி மாதத்தில் மட்டுமே விநாயகர் பூஜையில் தொடங்கி, ஆஞ்சநேயர் ஜெயந்தி வரை அனைத்து தெய்வ வழிபாடுகளும் நடக்கின்றன. எனவே தான், மார்கழி மாதம் பீடுடைய மாதம் என்று போற்றப்படுகிறது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களின் நாள். தேவர்களின் பகல் நேரம் தை முதல் ஆனி மாதம் வரை ஆகும். இது உத்தராயனம் எனப்படும். தேவர்களின் இரவு நேரம் ஆடி முதல் மார்கழி வரை ஆகும். இது தட்சிணாயனம் எனப் படும்.

Advertisement

இந்த முறைப் படி, மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாகும். எனவே இந்த மாதத்தில் தெய்வ வழிபாட்டுக்குரிய சிறந்த மாதமாக கருதி, வேறு எந்த மங்கல நிகழ்ச்சிகளையும் நாம் நடத்துவதில்லை.

மார்கழி மாதம் முழுவதும், ஆண் ,பெண்,அனைவரும் சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து விடுவார்கள். அன்றாட கர்ம அனுஷ்டானங்களை நியமமாக செய்து முடிப்பார்கள். வீட்டைச் சுத்தம் செய்து, முற்றத்தின் நடுப்பகுதியைச் சாணத்தால் மெழுகி,மாக்கோலம் போட்டு,சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புக்களைத் தூவி,விநாயகரை வழிபடுவார்கள்.

குறிப்பாக, அசுர,பூதபிசாசுகளின் தொல்லைகளால் எந்தவித துயரமும் நேரத்த படி காப்பற்றுவாயாக என்று விநாயகரை வணங்குவார்கள். அந்த வீட்டில் காவல் தெய்வமாக விநாயகரே இருந்து காப்பார்.

அப்படி வீடு தேடி வரும் பூத பிசாசுகள்,எறும்பாகவும், ஊர்வனவாகவும் வந்து, வாசலில் மாக்கோலமிட்ட பச்சரிசி மாவைச் சாப்பிட்டு விட்டு என்று விடும். எனவே தான், பச்சரிசி மாவினால் தான் கோலமிட வேண்டும்.

தொடர்ந்து இப்படி பூஜை செய்யும் விநாயகர் வடிவங்களை, தைப் பொங்கலுக்குப் பின், ஒரு நல்ல நாளில், மொத்த விநாயகர் வடிவங்களை ஓரிடத்தில் வைத்துபூஜை செய்து , பிரத்யேக தேரில் அந்த சாண விநாயகர்களை வைத்து அலங்கரிப்பார்கள். பிறகு வாத்திய கோஷத்துடன், கடலில்,அல்லது குளத்தில் கரைப்பார்கள். மார்கழியில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் வீட்டில் வறுமை நீங்கும்.நோய் நீங்கும்.செல்வம் பெருகும்.விரும்பிய ஆசைகள் நிறைவேறும்.

பற்றற்ற நிலையுடன் பலனை எதிர்பார்க்காத பக்தர்கள் என்றால், பிரகலாதன், ஆஞ்சநேயர்,மற்றும் கோபியர் ஆகியவர்களே. உத்தமனான பக்தர்கள் பலவிதமான சோதனைகளுக்குப் பிறகு இறைவனால் காப்பாற்றப் பட்டு உயர்ந்தார்கள்.

ஆனால். சுவாமிக்கும் அவர் பிராட்டிக்கு ஒரு சோதனை வந்த போது, அவர்களைக் காப்பாற்றினார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் அவதார நாள், மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வருகிறது. இந்தவகையில் மார்கழி மாத சிறப்பு விநாயகரின் தொடங்கி ஆஞ்சநேயர் பூஜையில் நிறைவடைகிறது.

மார்கழி என்றாலே, மணிவாசகர் அருளிய திருவெம்பாவையும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் எங்கும் ஒலிக்கும். நம் அக இருளையும், புற இருளையும், ஒன்றாக நீக்கும் சக்தி, இந்த இரண்டு பாவை பாடல்களுக்கும் உண்டு. எனவே தான், மார்கழி மாதம் அதிகாலையில், பாவை பாடல்கள் பாடி திருக்கோயில் வளம் வந்து இறைவனை வணங்குவது தொன்று தொட்டு பழக்கமாக உள்ளது.

மார்கழி என்றாலே ஸ்ரீ நடராஜ பெருமான் நினைவுக்கு வருவார். இந்த மாதத்தில் தான் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடக்கிறது. மார்கழி திருவாதிரை நாளன்று ஸ்ரீ நடராஜ பெருமானுக்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். ஆருத்ரா தரிசனம் அற்புத தரிசனம் ஆகும். இந்த நாளில் தான், பதஞ்சலி முனிவருக்கும், புலிக் கால் முனிவருக்கும் இறைவன், ஆனந்த நடனத்தை ஆடிக் காட்டினார் என்பது வரலாறு .

மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்த ஸ்ரீ ஆண்டாள், இந்நாளில் தான் திருவரங்க நாதரைத் திருமணம் புரிந்து போக போக்கியங்களை அனுபவித்தாள். அதனாலேயே இந்நாள் போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது.

இருட்டு முடிந்து தேவர்களின் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. எனவே மார்கழி மாதம் முழுதும் இறைவனை துதித்து வழிபட்டால், தை முதல் ஆடி வரை உள்ள ஆறு மாதங்களும் போகங்களை அனுபவிக்கும் காலமாக மாறும் என்பது உண்மை.

தீமைகளை அகற்றி நன்மைகளை வழங்கும் இந்த நல்ல மாதத்தில், இறைவனை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.

Advertisement
Tags :
Advertisement