தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! : உச்சநீதிமன்றம்
தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
'மின்னணு வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாதங்கள் நடந்தன.
அப்போது, தங்களுடைய பொதுநல மனு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளதாக விமர்சித்த நீதிபதிகள், பிற நாடுகளில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறதா அல்லது மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது என பதிலளித்த மனுதாரர், இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதாகவும், கடந்த மக்களவை தேர்தலில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றினால் ஊழல் ஒழிந்துவிடுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதாக மனுதாரர் பதிலளித்தார்.
அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தலில் தோற்றால் மின்னணு வாக்குப்பதிவு முறையை குறை கூறுவதும், வெற்றிப்பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு ஆதரவு தெரிவிப்பதும் இயல்புதான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.