தொடர் மழை எதிரொலி - சபரிமலையில் தமிழக பக்தர்களின் வருகை குறைவு!
தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தரிசனத்திற்கு செல்லவில்லை.
நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டபோது, ஐந்து வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.
மாலை தீபாராதனைக்குப் பிறகும் பக்தர்கள் வருகை அதிகரிக்கவில்லை. பிரசாத கவுண்டர்கள் முன்பும் கூட்ட நெரிசல் இல்லை. நேற்று இரவு 9 மணியளவில் 18ம் படி ஏறிய பக்தர்கள் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருந்தது.
நேற்று மட்டும் 63,242 பேர் 18வது படியில் ஏறி தரிசனம் செய்தனர். இதில் 10,124 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் வந்துள்ளனர். தற்போது பம்பை மற்றும் நிலக்கல் பகுதிகளில் கூட்டம் கட்டுக்குள் உள்ளது.