தோல்வி பயத்தில் திமுக : தேர்தல் வியூக அமைப்புடன் கைகோர்ப்பு - சிறப்பு கட்டுரை!
தமிழக மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது மீது நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் வியூக அமைப்புடன் திமுக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த நிறுவனத்துடன் திமுக மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழகத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும், கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜகவும் தங்களின் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தவறியதும் திமுகவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பால் விலை, மின்சாரக் கட்டணம், தொழில்வரி, சாலைவரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்து விதமான வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்திய திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் பல்வேறு ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தேர்தலுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பலையாலும், தோல்வி பயத்தாலும் மீண்டும் தேர்தல் வியூகம் அமைப்பை ஆளும் திமுக அரசு, நாடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் அமைப்பிற்கு பலநூறு கோடிகளை கொடுத்து தேர்தல் வியூகங்கள் மூலம் ஆட்சியமைத்த திமுக, அதன் பின்னர், சபரீசனின் நிறுவனமாக கூறப்படும் பென் அமைப்பை முன்னிறுத்தி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது.
ஆனால் தமிழகம் முழுவதும் தேர்தல் வியூகம் அமைக்கும் அளவிற்கு பென் நிறுவனத்தின் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் பிரபல தேர்தல் வியூக அமைப்பாளர் ராபின் சர்மாவின் SHOW TIME CONSULTANCY நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021ம் ஆண்டு பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட திமுக, தற்போது அதே பிரசாந்த் கிஷோரின் ஆதரவுடன் இயங்கிவரும் SHOW TIME CONSULTANCY நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருப்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவின் அபரிவிதமான வளர்ச்சிக்கும் இதே ராபின் சர்மாவின் SHOW TIME CONSULTANCY நிறுவனமே முக்கிய காரணமாக இருந்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை, பாஜக முந்தி வருகிறது. அதிலும் அண்ணாமலை தலைமை பொறுப்புக்கு வந்தபின்னர் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதோடு, வலுவான கூட்டணியும் அமைந்திருக்கிறது.
பாஜகவின் வலுவான கூட்டணி, மக்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை ஆகிய இரண்டும் தோல்வியை ஏற்படுத்திவிடும் என்ற பயத்திலேயே தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே தேர்தல் வியூகம் அமைக்க திமுக ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.