நடிகர் சூரியின் உணவகத்திற்கு சிக்கல்!
நடிகர் சூரியின் உணவகத்திற்கு சீல் வைக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு அளித்தார்.
திரைப்பட நடிகர் சூரிக்குச் சொந்தமான அம்மன் உணவகம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உணவகம் நிர்வாகம் விதிமுறைகளை மீறி அங்கு கூடுதலாக 350 சதுர அடிக்கு ஷெட் அமைத்தும், 360 சதுரஅடி திறந்தவெளி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு அளித்தார்.
நடிகர் சூரியின் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவை தயாரித்து விற்பனை செய்வதாகவும், எனவே அந்த உணவகத்திற்கு சீல் வைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உணவக நிர்வாகம், நடிகர் சூரி மீதான காழ்ப்புணர்ச்சியால் தனி நபர் தூண்டுதலின் பேரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உணவகம் அருகே கூடுதலாக இடம் கேட்டு அதற்குரிய வாடகையை முறையாக செலுத்தி வருவதாகவும், சுகாதாரமான முறையிலேயே உணவு தயாரித்து வழங்குவதாகவும் உணவக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.