நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக குளத்தூரில் இருந்து நைனார் கோவில் வரை சுமார் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய 60 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்போது பணிகள் முடியும் என 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.
அப்பகுதிகளில் விளையும் வேளாண் பொருட்களை விற்பனை செய்ய ராமநாதபுரத்திற்கோ அல்லது பரமக்குடிக்கோ கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பிரதான சாலையே படுமோசமாக உள்ளதால், விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்குள் காய்கள் கனிந்து விடக் கூடிய சூழல்தான் அங்கு நிலவுகிறது...
பணி நடைபெறும் சாலையில் ஒரு வாகனம் செல்லும்போது கிளம்பும் தூசி அடங்குவதற்கு சுமார் 5 நிமிடமாவது ஆவதாகவும், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சாலை கரடு முரடாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் துயரமும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவிக்கு அழைத்தால், இந்த சாலை வழியாக வருவதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே தயக்கம் காட்டுவதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சாலைப் பணி விவகாரத்தை அதிகாரிகள் காதுகளுக்குக் கொண்டு சென்றால், கண்டுகொள்ளவே இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்...
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜா, "பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்திற்குள் தார் பரப்பும் பணி தொடங்கி விரைவாக பணிகள் முடிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
3 ஆண்டுகளுக்கு மேலாக நத்தை வேகத்தில் நடைபெறும் சாலைப் பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுவட்டார கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.