நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை! : டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது
ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் டாட்டூ கடை நடத்தி வருகிறார். ரீல்ஸ் செய்வதில் மோகம் கொண்ட இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு, ஓணான் போல தனது நாக்கை இரண்டாகப் பிளக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில், தன்னைப் போலவே ட்ரெண்டிங் மோகம் கொண்ட இளைஞர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்து அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஹரிஹரினின் செயல்பாடுகளை கண்காணித்து வந்த திருச்சி போலீசார், அவரது டாட்டூ கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், உரிய அனுமதி இன்றி நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடைக்கு சீல் வைத்த போலீசார், ஹரிஹரன் மற்றும் கடையில் வேலை செய்து வந்த ஜெயராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.