நாக்கை வெட்டி'டாட்டூ' : எச்சரிக்கும் மருத்துவர்கள் - சிறப்பு தொகுப்பு!
ட்ரெண்டிங் மோகத்தில் நாக்கை இரண்டாக பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளரை கைது செய்திருக்கிறது காவல்துறை.. எங்கு நடந்தது... விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
ட்ரெண்டிங்கிற்காகவும் மற்றவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்துக் காட்டுவதற்காகவும் உடலை வித்தியாசமாக மாற்றிக் கொள்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். வேற்றுக்கிரக மனிதர்களைப் போல தோலில் மாற்றம் செய்வதும், பாம்பு, ஓணான் போல நாக்கை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு சிகிச்சை செய்வதும், கண்ணின் வெள்ளைப் பகுதியை நிறமாற்றம் செய்வதுமாக டாட்டூ பிரியர்களின் அட்டூழியும் நாளுக்குநாள் எல்லை கடந்து செல்கிறது.
அந்தவகையில் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வில்லங்கத்தை இழுத்து போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். அந்தோணியார் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், டாட்டூ குத்துவதில் எல்லையற்ற மோகம் கொண்டிருந்தார். இதனால், மும்பைக்கு சென்று டாட்டூ கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது டிரெண்டிங்கில் வருவதற்காக நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹரிஹரன், அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து லைக்ஸை அள்ளி வந்தார்..
டாட்டூ மீதான மோகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் ஏலியன் எமோ டாட்டூ என்ற கடையையும் தொடங்கினார் ஹரிஹரன். அப்போது அங்கு வரும் இளைஞர்கள், தங்களுக்கும் நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்யுமாறு கேட்க, கோதாவில் இறங்கியுள்ளார். அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அணியும் உடையணிந்து இளைஞர்களின் நாக்கை இரண்டாக பிளந்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டு வந்துள்ளார்.
ஹரிஹரனின் செயலைக் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வந்த திருச்சி காவல்துறை, ஒரு அளவிற்கு மேல் பேச்சே கிடையாது என்ற வசனத்திற்கேற்ப அவரது டாட்டூ கடையில் அதிரடியாக சோதனை நடத்தியது. அதில், உரிய அனுமதியின்றி நாக்கில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கடைக்கு சீல் வைத்த காவல்துறை, ஹரிஹரன் மற்றும் அவரது கடையில் வேலை செய்து வந்த ஜெயராமன் என்பவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது. அவர்கள் மீது பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைத்தல், பயிற்சி பெறாமல் மருத்துவம் பார்ப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை சுகாதாரத்துறையும் தற்போது கையில் எடுத்துள்ளது. அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மயக்க மருந்துகளை எப்படி பயன்படுத்தினர்?.. அவை எப்படி கிடைத்தன என்பது தொடர்பாக குழு அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
டாட்டூ போடுவது பண்டையகால கலாச்சாரமாக இருந்தாலும் தற்போது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் கெமிக்கல் மருந்துகள் கலந்து போடுவதால் எச்ஐவி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் அலீம்.
ஒருவரின் ஆடை, ஆபரணங்கள் அவர்களின் தனிப்பட்டவை என்றாலும் அவை சமூகத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது....