நாசா கண்டுபிடிப்பு! : செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல்?
அறிவியல் ஆராய்ச்சியின் முக்கிய திருப்பமாக செவ்வாய் கிரகத்தில் நிலத்தடியில் மறைந்திருக்கும் மகாசமுத்திரத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு முழுவதையும் தண்ணீரால் மூடுவதற்கு போதுமானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த தண்ணீரை பயன்படுத்துவது சாத்தியமா ? இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ உதவுமா? இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மூன்று பில்லியன் ஆண்டுகளாக தான் செவ்வாய் கிரகம் பாலைவனமாக இருக்கிறது. அதற்கு முந்தைய காலங்களில், அங்கே தண்ணீர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே விஞ்ஞானிகளுக்கு இருந்து வந்தது. கூடவே செவ்வாய் கிரகத்தில் இருந்த தண்ணீர் எல்லாம் என்ன ஆனது? வற்றி விட்டதா ? என்ற கேள்விகளும் விஞ்ஞானிகளுக்கு எழுந்தது.
இதன் விளைவாக, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா ? என்ற ஆய்வுகள் தொடங்கப் பட்டன. செவ்வாய் கிரகத்தின் நீர் சுழற்சியைப் புரிந்துகொள்வது என்பது காலநிலை, மேற்பரப்பு மற்றும் உட்புறத்தின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் விண்வெளி ரோபோடிக் எக்ஸ்ப்ளோரர், (InSight Lander ) இன்சைட் லேண்டர், 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தைத் தொட்டது.
செவ்வாய் கிரகத்தின் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்த இந்த ரோவர் 1,300 க்கும் மேற்பட்ட செவ்வாய் கிரக நிலப் பரப்பின் படிமங்களை ஆய்வு செய்தது தரவைப் படித்தது.
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள Elysium Planitia என்னும் சமவெளியில் இருந்து செவ்வாய் கிரகத்தின் தரவுகள் சேகரிக்கப் பட்டது.
நாசா விஞ்ஞானிகள் குழு இந்தத் தரவுகளைக் கணினி மாதிரிகளுடன் இணைத்து, ஆய்வு செய்தனர்.
ஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் திரவ உப்புநீரைக் கண்டறிந்தாலும், நாசாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
ஏனெனில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த தண்ணீர் செவ்வாய் கிரகத்தின் நடுப்பகுதியில் ஏழு மைல்கள் முதல் 12 மைல்கள் வரை நிலத்தடியின் கீழ் இருக்கும் என நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு, சீனாவின் மார்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மிகவும் பரவலாக இருக்கலாம் என்று கண்டறிந்தது குறிப்பிடத் தக்கது.
ஆராய்ச்சி தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகள், செவ்வாய் கிரகத்தில் உறைந்த நீருடன் கூடுதலாக திரவ நீர் உள்ளது என்பதற்கு சிறந்த சான்றாக அமைத்திருக்கிறது.
இதற்கிடையே ,பூமியில் கூட, அரை மைல் ஆழத்துக்கு தோண்டுவது கஷ்டமான வேலையாக இருக்கும் போது செவ்வாய் கிரகத்தில் நிலத்தைத் தோண்டுவது மிகவும் கஷ்டம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.