நிலையான ஞானம் ஒளிரும் இடம் 'பாரதம்' : குடியரசுத் துணைத் தலைவர்
நமது கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றத்திற்கான வாழும் நிறுவனங்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
தார்வாடில் உள்ள ஸ்ரீ நவக்கிரக தீர்த்த க்ஷேத்ராவில் 'சுமேரு பர்வதம்' தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
நமது ஆன்மீக சக்தியை நாம் பாதுகாத்து அதை நாம் வளர்த்திருக்கிறோம் என்றார். எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும் அது வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். நிலையான ஞானம் ஒளிரும் இடம் 'பாரதம்' என்றும் இங்குதான் மனிதகுலம் அமைதியைக் காண்கிறது எனக் கூறினார்.
நமது நாகரிகம், 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறிய அவர், நமது நெறிமுறைகள், நமது அறிவுச் செல்வம், ஞானச் செல்வம் ஆகியவை பல யுகங்களின் ஞானத்தைக் கொண்டுள்ளது என்றார்.
நன்னெறி நடத்தையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர், நன்னெறி தரநிலைகள் நமது கலாச்சாரத்தில் பொதிந்துள்ளன என்று கூறினார்.
நமது மத, புனித இடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நமது கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல என்றும், அவை சமூக மாற்றத்திற்கான வாழும் நிறுவனங்கள் எனத் தெரிவித்தார். நமது புனித இடங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்மிக்க மையங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.