நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 8 தமிழக மாணவர்கள் உட்பட 67 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு தேசிய தேர்வுகள் முகமை மூலம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற நீட்நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் தேர்வை எழுதினர்.
இதில் தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்வை எழுதினர். இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது.
இந்த தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட பூஜ்யம் புள்ளி 2 சதவீதம் அதிகம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தினர். இதில் 8 மாணவர்கள் முழு மதிப்பெண்களான 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
இந்த 8 தமிழக மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.